நிரல்
நவ. 27 20:54

யாழ்- கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் இன்று புதன்கிழமை நடைபெற்றன. பெருமளவு மக்கள் நிகழ்வில் பங்குபற்றி மாவீரர்களை நினைவுகூர்ந்தனர். மக்கள் தேசமாக எழுந்து மாவீரர் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்க, அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச் சுடரேற்றப்பட்டது.
நவ. 26 20:59

கோட்டாபய சர்வதேச நீதிபதிகளை ஏற்கமாட்டார், ஜெனீவாத் தீர்மானம் நிராகரிக்கப்படும்- தினேஸ்

(வவுனியா, ஈழம்) இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் கலந்துரையாடி போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தீர்மானங்களை ரத்துச் செய்யவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார். சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதித்து விசாரணைகளை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதிக்கமாட்டார் என்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றபோது அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இவ்வாறு கூறியிருந்தார்.
நவ. 25 22:49

கோட்டாபய ராஜபக்சவுடன் பிரித்தானியத் தூதுவர் சந்திப்பு- சவூதி இராஜதந்திரியும் உரையாடல்

(வவுனியா, ஈழம்) இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிரித்தானியா தயாராக இருப்பதாக கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்டன் (Sarah Hulton) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை கொழும்பு காலிமுகத் திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறியுள்ளார். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரித்தானியத் தூதுவர் இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பில் பிரதி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் டொம் பேர்னும் (Tom Burn) கோட்டாபய ராஜபக்சவின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நவ. 24 22:20

குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி சுவிஸ்லாந்தில் அரசியல் தஞ்சம்

(வவுனியா, ஈழம்) இலங்கைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக கொள்ளை தொடர்பான விசாரணைகளை நடத்திப் பிரபல அரசியல்வாதிகளின் பல ஊழல் மோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகங்கள் தொடர்பான பல விடயங்களை நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா, அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இருந்து குடும்பத்துடன் வெளியேறியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எனப்படும் சி.ஐ.டி.யின் சமூகக் கொள்ளை குறித்த விசாரணை அறையின் பொறுப்பதிகாரியான நிசாந்த டி சில்வா, மனைவி மற்றும் மூன்று மகள்மாருடன் சுவிஸ்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நவ. 23 22:58

முப்படையினரையும் ஈடுபடுத்துமாறு கோட்டாபய உத்தரவு- வர்த்தமானி இதழ் வெளியானது

வடக்குக் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் முப்படையினரையும் பொதுமக்கள் பாதுகாப்புச் சேவையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் வர்த்தமானி இதழ் வெளியிடப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச நேற்று வெள்ளிக்கிழமை கையொப்பமிட்ட வர்த்தமானி இதழ் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் நாடாளுமன்றத்தினால் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முப்படையினரையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான உத்தரவு கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதே இதன் பிரதான நோக்கம் என்று அரசாங்கம் கூறுகிறது.
நவ. 23 08:08

மரியாதைச் சந்திப்பு- பின்னாலுள்ள இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொழும்பில் உள்ள அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் சந்தித்து உரையாடியுள்ளனர். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நவ. 22 14:37

பிரித்தானிய ஊடகத்துக்கு எதிராகப் பிக்குமார் கொழும்பில் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

(வவுனியா, ஈழம்) புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்சவை தமிழ் இன அழிப்பாளர் என விமர்சித்துச் செய்தி வெளியிட்ட சர்வதேச செய்தி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நேற்று வியாழக்கிழமை கொழும்பு-07 பௌத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரித்தானிய தூதரகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிரித்தானியாவில் உள்ள சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரைத் தமிழ் இன ஒழிப்புக்கு காரணமான இராணுவத் தலைவரெனக் கூறியதாக ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்தனர்
நவ. 21 22:00

ஐந்து மாணவர்கள் கொலை வழக்கின் குற்றப் புலனாய்வுப் பணிப்பாளர் திடீர் இடமாற்றம்

(மட்டக்களப்பு, ஈழம்) கொழும்பில் ஐந்து மாணவர்கள், உட்பட பதினொரு தமிழர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, றக்பி வீரர் தாஜுதீன் ஆகியேரின் கொலை வழக்கு விசாரணைகள் தொடர்பாகக் கடமையாற்றி வந்த இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபயசேகர திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற மிக முக்கியமான கொலைக் குற்றங்கள் தொடர்பான விவகாரங்களை வெளிப்படுத்திய குற்றப் புலனாய்வாளரான ஷரனி அபயசேகர தெற்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நவ. 21 14:22

பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு- அமைச்சரவை நாளை நியமனம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்கியுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் ஒரு மணிக்கு பதவிப் பிரமாணம் இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்குபற்றியிருந்தனர். கோட்டாபாய ராஜபக்ச அதிகாரபூர்வமாக பிரதமர் நியமனத்தை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கினார். அதனையடுத்து இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தமது கடமைகளை மகிந்த ராஜபக்ச ஆரம்பித்தார்.
நவ. 20 22:14

இடைக்கால அரசாங்கம்- மகிந்த பிரதமராகிறார்- பதினைந்து பேர் கொண்ட அமைச்சரவையும் நியமனம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச சென்ற திங்கட்கிழமை பதவியேற்றுள்ள நிலையில் தற்காலிகமாக இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை மாலை பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். அதிகாரபூர்வமாக நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் பதவி விலகல் கடிதம் அனுப்பவுள்ளதாகவும் இன்றிரவு அலரிமாளிகையில் வைத்துக் கூறினார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைக்கவுள்ளார். பிரதமராக தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார்.