நிரல்
டிச. 04 10:46

புங்குடுதீவில் பாரிய கடற்படை முகாம் அமைக்க பொதுமக்களின் காணிகள் சுவிகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) வடமாகாணம் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இலங்கைக் கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு சுமார் பதின்நான்கு ஏக்கர் காணியை சுவிகரிக்கவுள்ளனர். புங்குடுதீவு கிழக்கு ஒன்பதாம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளே சுவிகரிக்கப்படவுள்ளன. இலங்கைக் கடற்படையின் உத்தரவுடன் வேலணைப் பிரதேச சபைச் செயலாளர் ஏ.சோதிநாதன் காணி உரிமையாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார். பதின்நான்கு நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேசச் செயலாளர் அந்தக் கடிதத்தில் கேட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
டிச. 03 20:08

தையிட்டியில் பொதுமகனுக்குச் சொந்தமான காணியில் விகாரை

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் வலி.வடக்குத் தையிட்டிப் பிரதேசத்தில் பொது மகன் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தற்போது விகாரை கட்டுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். பொது மகனுக்குச் சொந்தமான காணியை அபகரித்து விகாரை கட்டுவதைச் சட்ட ரீதியில் தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென வலி வடக்குப் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சஜீவன் அழைப்பு விடுத்துள்ளார். மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் கொழும்பை மையப்படுத்திய இலங்கை அரச திணைக்களங்கள் சிலவற்றின் மூலமாக இராணுவத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
டிச. 02 23:15

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது- மோடி முன்னிலையில் நேரடியாகவே மறுத்தாரா கோட்டாபய

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைகளுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம் நேரடியாகவே கூறியதாகப் புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பின்போது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதாக, நரேந்திரமோடி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இருவருக்குமிடையிலான சந்திப்பு முடிவடைந்த பின்னர் புதுடில்லியில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்பாகவே நரேந்திரமோடி அவ்வாறு கூறியிருந்தார்.
டிச. 02 10:27

சீன விசேட பிரதிநிதி மகிந்தவுடன் சந்திப்பு- அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம் குறித்து உரையாடல்

(வவுனியா, ஈழம்) மைத்திரி- ரணில் அரசாங்கம் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 வருடங்களுக்குச் சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுக்குக் குத்தகைக்குக் கொடுப்பதற்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரத்துச் செய்யவுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியொருவர் கொழும்புக்கு வருகை தந்துள்ளார். சீன- இலங்கை நட்புறவு பாதிக்கப்படாத வகையில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாகச் செய்யப்பட்ட ஒப்பந்தம் குறித்து மீளாய்வு செய்யும் நோக்கில் சீனாவின் விசேட பிரதிநிதி கொழும்புக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் கூறியுள்ளது. இலங்கைக்கான முன்னாள் தூதுவர் வு ஜியாங்காவோ (Wu Jianghao) விசேட பிரதிநிதியாகக் கொழும்புக்கு வந்துள்ளார்.
டிச. 01 15:50

பொதுசன அபிப்பிராயங்களை சிவில் சமூக அமைப்புகள் உருவாக்க வேண்டும்

(திருகோணமலை ஈழம்) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க்கட்சிகளின் செயற்பாடுகள் பலவீனமடைந்துள்ளதால், சிவில் சமூக அமைப்புகள் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென கல்வியாளர்கள், கருத்துருவாக்கிகள், சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பொதுசன அபிப்பிராயங்கள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் சிதறுண்டு தமது வசதி வாய்புகளுக்கு ஏற்ற முறையில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் கட்டமைப்பை ஏற்றுச் செயற்படுவதால் அரசியல் தீர்வுக்கான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன.
நவ. 30 11:08

சர்வதேச மத்தியஸ்த்தம் அவசியம் என வலியுறுத்தப்படும் நிலையில் பிரித்தானியத் தூதுவருடன் சுமந்திரன் சந்திப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒருவாரம் சென்றுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முதன் முறையாக கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்ரன் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். தேர்தலின் பின்னரான சூழலில் வடக்குக்- கிழக்குப் பிரதேசங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தே தூதுவர் சாரா ஹல்ரன் கேட்டறிந்து கொண்டதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நவ. 29 19:03

இந்தியாவின் நானூறு மில்லியன் டொலர்கள் உதவியைப் புறம்தள்ள முடியாத சிக்கலுக்குள் இலங்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் நடத்திய பேச்சுக்களின் முழுமையான விபரங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனாலும் பேச்சுக்கள் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கோட்டாபய ராஜபக்சவுக்கான சில விடயங்களை நரேந்திரமோடி கூறியுள்ளார். குறிப்பாக இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தித், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தீர்வை வழங்குவது அவசியமென அறிவுறுத்தியுள்ளார் மோடி. அத்துடன் இலங்கைக்கு வழங்கும் கடனுதவியை நானூறு மில்லியின் அமெரிக்க டொலர்களாக மேலும் அதிகரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நவ. 29 10:19

சிங்களப் பெண் ஊடகவியலாளர் நான்கு மணிநேர விசாரணைக்குப் பின்னர் விடுதலை

(வவுனியா, ஈழம்) சிங்களப் பெண் ஊடகவியலாளர் துஷாரா விதாரன (Thushara Vitharana) கொழும்பில் உள்ள இலங்கைக் குற்றவியல் திணைக்களத்தின் நான்காம் மாடியில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை சுமார் நான்கு மணித்தியாலங்கள் விசாரணை இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் ஊடக அதிகாரியாகச் செயற்பட்ட துஷாரா விதாரன theleader.lk இன் செய்தி வெளியீட்டிற்கும் பங்களிப்புச் செய்கிறார். Voiceetube.lk இன் இணைய ஆசிரியராகவும் துஷாரா விதாரன செயற்படுகிறார். ஊடகக் கருத்தரங்கு ஒன்றுக்காக சமீபத்தில் சீனாவுக்குச் சென்று திரும்பிய நிலையில் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நவ. 28 20:37

கொழும்பில் சுவிஸ் தூதரகப் பெண் அதிகாரி கடத்தப்பட்டமைக்குக் காரணம் கூற முடியாது- அமைச்சர் சுசில்

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவின் தலைநகர் கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்து நாட்டின் தூதரகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பாக எதுவுமே கூற முடியாதென புதிதாகப் பதவியேற்றுள்ள சர்வதேச ஒத்துழைப்புக்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். குறித்த அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பாக அரசாங்கத்துக்கு சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் ஆனாலும் கடத்தப்பட்டமைக்கான காரணிகளைக் கூற முடியாதென்றும் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். எனினும் கடத்தப்பட்டமை தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நவ. 28 20:07

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைப் படம் எடுத்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது விசாரணை

(முல்லைத்தீவு ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைப் படம் எடுத்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை இன்று வியாழக்கிழமை படம் எடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து சென்றபோது அவர்களைப் பின்தொடர்ந்த குற்றப் புலனாய்வுப் பொலிஸார், புதுக்குடியிருப்பு தேக்கம் காட்டுப்பகுதியில் வழிமறித்து விசாரணைக்கு உட்படுத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளே இன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்குச் சென்றிருந்தனர்.