நிரல்
ஜூலை 10 14:39

யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றுக்கு இதுவரை 107 பேர் பலி

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிற் -19 நோய்த் தொற்றினால் முதல் மரணம் சம்பவித்த நாளில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஏழாம் திகதி வரை 107 பேர் மரணித்துள்ளதாகவும் குடா நாட்டில் யாழ் நகர பிரதேச செயலகப் பிரிவிலேயே அதிக கொவிட் மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கொவிட் இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் இதில் ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.
ஜூலை 09 23:16

பண்டுவஸ்நுவர பிரதேச சபையை இழந்தது ராஜபக்ச அரசாங்கம்

(வவுனியா, ஈழம்) குருநாகல் பண்டுவஸ்நுவர பிரதேச சபையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றினாலும் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் செல்வாக்குக் குறைந்து விடாதென அமைச்சர் ஜென்ஸ்ரன் பெர்னான்டோ கூறியுள்ளார். பண்டுவஸ்நுவர பிரதேச சபை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் கைமாறியதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் குருநாகல் மாவட்ட உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாடியதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஜூலை 09 22:10

மன்னாரில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

(மன்னார், ஈழம் ) மன்னார் நகரப் பகுதிகளில் வதியும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்- 19 தடுப்பு ஊசி செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த திங்கட் கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்டத்திற்கு 5000 எண்ணிக்கையான சினோஃபார்ம் தடுப்பு ஊசிகள் எடுத்துவரப்பட்ட நிலையிலேயே மாவட்டத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு குறித்த ஊசிகள் செலுத்தப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஜூலை 08 11:18

தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்துக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

(வவுனியா, ஈழம்) ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக நகல் சட்ட மூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாராளுமன்றத்தில் இந்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று வியாழக் கிழமை இடம்பெற்றபோது பாராளுமன்றத்திற்குச் செல்லும் பொல்துவ சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கொவிட் 19 நோய்ப் பரவலைத் தடுக்கும் சுகாதார விதிகளுக்கு முரணானது என பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள், ஊடக தொழிற் சங்கங்கள், அரச தொழிற் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜூலை 07 20:43

ஜனாதிபதி வேட்பாளரும் கோட்டாபய ராஜபக்சவே- கட்சி அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ச போட்டியிடுவாரெனக் கூறப்பட்டு வந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச இரண்டாவது தடவையும் போட்டியிடுவாரென கட்சி இன்று புதன் கிழமை அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய துறைமுக அமைச்சர் ரோகித்த அபே குணவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது தனிப்பட்ட தனது கருத்தல்ல என்றும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஒட்டுமொத்த விருப்பம் எனவும் ரோகித அபே குணவர்த்தன தெரிவித்தார்.
ஜூலை 06 23:37

அமெரிக்க காங்கிரஸ் பிரேரணை தொடர்பாக ராஜபக்ச அரசாங்கம் கவனம் செலுத்தவில்லையெனக் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசம் தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை அரசாங்கம் சாதாரண விடயமாகக் கருதக்கூடாதென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இஸ்ரேல் எப்படி தனி நாடாகியது என்ற வரலாற்றைச் சுட்டிக்காட்டிய லக்ஸ்மன் கிரியெல்ல, அமெரிக்கக் காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பாகக் கவனம் செலுத்தி அதனை ரத்துச் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
ஜூலை 05 21:46

வட மாகாண சபையின் தலைமைச் செயலாளர் பதவிக்குப் போட்டி

(யாழ்ப்பாணம், ஈழம்) வட மாகாண சபையின் தலைமைச் செயலாளர் அந்தோணிப்பிள்ளை பத்திநாதன் தனது சேவையில் இருந்து இன்று திங்கள் கிழமை 5ஆம் திகதி முதல் ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் குறித்த தலைமைச் செயலாளர் பதவியைக் குறி வைத்து வட மாகாணத்தில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ள இலங்கை நிர்வாகச் சேவையைச் சேர்ந்த தமிழ் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதுடன் அப்பதவியை பெறும் நோக்கில் அவர்கள் அரசியல்வாதிகள் ஊடாக கடும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் வட மாகாண சபை வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல் தெரிவித்தன.
ஜூலை 05 13:39

மூழ்கிய கப்பலில் இருந்த இரசாயனப் பொருட்களை அகற்ற நடவடிக்கை இல்லையெனக் குற்றச்சாட்டு

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்கு உள்ளாகிய கப்பலில் இருந்து கரையொதுங்கி வரும் பிளாஸ்ரிக் மூலப்பொருட்களை மட்டும் அகற்றிவரும் இலங்கை அரசாங்கம் மூழ்கிய கப்பலில் உள்ள இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீட்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எதிர்காலத்தில் இலங்கை மக்கள் பெரும் அபாயத்திற்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசச் செயலாளரும் வட மாகாண கடற்றொழில் இணையத்தின் மன்னார் மாவட்டத் தலைவருமான என். முஹம்மட் ஆலம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஜூலை 04 22:04

கொழும்பு போட் சிற்றி, பசில் பதவியேற்கவுள்ள அமைச்சின் கீழ்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ள பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இராஜாங்க நிதி அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பு போட் சிற்றி எனப்படும் கொழும்பு சர்வதேச நிதி வர்த்தக நகரம், இலங்கை முதலீட்டுச் சபை உள்ளிட்ட முக்கிய அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் பசில் ராஜபக்ச பதவியேற்கவுள்ள அமைச்சின் கீழ் செயற்படும் எனவும் கூறப்படுகின்றது. இது தொடர்பாக ஜனாதிபதி கோட்;டாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்தில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஜூலை 03 22:21

முத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு கோட்டாபய அழைப்பு

(கிளிநொச்சி, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதற்குப் பெரும் பங்காற்றித் தற்போது அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து வரும் கொழும்பு அபயராம விகாராதிபதி முத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார். கோட்டாபய ராஜபக்சவைக் கடுமையாக விமர்சித்து வந்த நிலையிலேயே இந்த அழைப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை முத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு நேரடியாக விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.