செய்தி: நிரல்
நவ. 20 19:18

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

(வவுனியா, ஈழம்) கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கொவிட் 19 நோய்ப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் 37 உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனச் சுகாதார அமைச்சு கேட்டுள்ளது. உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வந்தது. சென்ற புதன்கிழமை முதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது என்றும் இதனால் பொதுமக்கள் தேவையற்ற முறையில் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சசு தெரிவித்துள்ளது.
நவ. 18 21:54

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான வழக்கு 22 ஆம் திகதி ஆரம்பம்

(மன்னார், ஈழம்) இலங்கையில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜீத ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகிய இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
நவ. 17 23:44

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது- வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்பனை

(வவுனியா, ஈழம்) கொழும்பு சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமைக்கும் அதனை வெளிநாடொன்றுக்கு விற்பனை செய்யவுள்ளதையும் கண்டித்து இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இலங்கை மின்சாரத்துறையின் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் இலங்கைத்தீவு முழுவதும் மின் துண்டிக்கப்படும் நிலை வந்துவிட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவ. 17 21:00

முல்லைத்தீவில் மாவீர் நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை

(முல்லைத்தீவு) எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி (நவம்பர் மாதம்) துயிலுமில்லங்களில் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வு இலங்கை இராணுவத்தின் பல தடைகளுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடைவிதித்து வருகின்றது.
நவ. 16 23:40

கொழும்பில் நடந்த எதிர்க்கட்சியின் போராட்டம் தோல்வி

(மட்டக்களப்பு, ஈழம்) கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணியினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி வெற்றி பெறவில்லை. வெளி மாவட்டங்களில் இரு பேரணியாக வாகனங்களில் ஆதரவாளர்கள் கொழும்பு நகரை நோக்கி வந்தனர். எதிர்பார்க்கப்பட்ட மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. வன்முறைகள் எதுவும் இன்றி ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி போன்ற சிறிய எதிர்க்கட்சிகள் எதுவும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
நவ. 16 08:12

மன்னாரில் கொவிட் 19- புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

(மன்னார், ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கொவிட்-19 நோய்த் தொற்று தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வசிப்பவர்களில் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பொது வெளியில் நடமாடுவதற்கும் வியாபாரம், அலுவலக பணிகள், பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் ஏனைய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு நேற்றுத் திங்கட்கிழமை தொடக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
நவ. 15 21:59

எதிரணியின் ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை-

(வவுனியா, ஈழம்) சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நாளை செவ்வாய்க்கிழமை பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை கொழும்பில் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், நாளை 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் பொது ஒன்றுகூடல் மற்றும் கூட்டங்கள் பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. கொவிட் 19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய சுகாதார விதிமுறை இன்று திங்கட்கிழமை மாலை அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிய விதிமுறையிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட மருத்துவர் அசேல குணவர்தன தடைவிதித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
நவ. 14 22:41

உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்த பின்னரும் அருட்தந்தை சிறில் காமினி மீண்டும் விசாரணைக்கு அழைப்பு

(வவுனியா, ஈழம்) கொழும்பு பேராயர் இல்லத்தின் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த விசாரணைகைள அவதானிக்கும் குழுவின் தலைவர் அருட்தந்தை சிறில் காமினி நாளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்றில் சென்ற 8 ஆம் திகதி பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அருட்தந்தை சிறில் காமினியை அழைத்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு விளக்கமளிக்கும் இணையவழிச் செய்தியாளர் மாநாடு கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்றிருந்தது.
நவ. 13 21:00

பங்காளிக் கட்சிகள் விலகத் தீர்மானம்

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அதன் பங்காளிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி வெளியேறத் தீர்மானத்துள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. பிரதான பங்காளிக்; கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் மக்கள் விரோத செயல்கள் குறித்து கலந்துரையாட வேண்டுமெனப் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கோரியதாகவும் ஆனாலும் இதுவரை அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவத்தார்.
நவ. 11 22:31

கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் நியமனம்? கோட்டாபாயவை சாடுகிறார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

(வவுனியா, ஈழம்) கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை வகிக்கும் தகுதி தனக்கு இல்லை என நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். சென்ற வாரம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டமை குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார். அரச தொலைக்காட்சியான ஐ.ரி.என் தொலைக்காட்சிக்கு இன்று வியாழக்கிழமை முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.