நிரல்
நவ. 11 21:57

மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில் தமிழர்களின் காணிகள் மீண்டும் அரசாங்கத்தால் அபகரிப்பு

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பரப்புக்கடந்தான் கிராமத்தில் 630 தமிழ் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகள் தனிநபர்களினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளில் பெரும் பகுதி இலங்கை வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கந்தையா சௌந்தரராசா கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார் 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராகப் பணியாற்றிய கே.கணேஷின் பணிப்பின் பேரில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் காணிகள் அற்ற மக்களுக்கு பரப்புக்கடந்தான் பகுதியில் அரச காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
நவ. 10 22:56

பொருளாதாரம் அடுத்த ஆண்டு இறுதியில் மீட்சி பெறுமென இலங்கை மத்திய வங்கி அறிக்கை கூறுகிறது

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கைத்தீவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு இறுதியில் இருந்து குறிப்பிடத்தக்களவு உயர்வடையுமென எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார ஒழுங்குகள் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருட ஆரம்பத்தில் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. ஆனாலும் அந்த நெருக்கடிகள் தற்போது குறைவடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நவ. 09 21:56

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவிகளைப் பெறுவதில் சிக்கல்- தொடர்ந்தும் உரையாடல்

(வவுனியா, ஈழம்) இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தொடர்ந்தும் பேச்சு நடத்துவதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள நிபந்தனைகள் பலவற்றை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளதாகவும் ஆனாலும் சில நிபந்தனைகளை நிறைவேற்றக் கால அவகாசம் தேவையெனவும் சர்வதேச நாணய நிதியத்திடம் கூறியுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியுள்ள நிலையில், நிபந்தனைகளை அரசியலாக்க வேண்டாம் என்று சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தனர்.
நவ. 08 21:31

ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதாகப் பேராயர் மல்கம் ரஞ்சித் ரணில் அரசாங்கம் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுவதாகக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை அரசியல் யாப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளான, பேச்சு, கருத்து மற்றும் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரத்தை அரசாங்கம் ஆணவத்துடன் தொடர்ந்து நசுக்குவதாகவும் பேராயர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிரபராதியென விடுதலை செய்யப்பட்ட பின்னர் கருத்துக்கூறாமல் அமைதிகாத்திருந்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
நவ. 07 18:23

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை

(வவுனியா, ஈழம்) மாகாண சபைத தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழு ஒன்றை அமைத்துள்ளமை காலம் கடத்தும் செயல் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களையோ அல்லது உள்ளூராட்சித் தேர்தல்களையோ தற்போதைக்கு நடத்தும் நோக்கம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லையென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஹர்சா டி சில்வா கூறியுள்ளார்.
நவ. 05 15:53

விரிவடையும் சீனாவின் உலகப் பொருளாதாரம்

(வவுனியா, ஈழம்) அமெரிக்காவும் சீனாவும் உலக அரசியல் ஒழுங்கில் தங்கள் - தங்கள் பலத்தை நிறுவிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளில் சீன - ரசிய உறவும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டுச் செயற்பாடுகளும் பிரதான வகிபாகத்தைக் கொண்டுள்ளன. இதில் இந்திய வகிபாகம் என்பது இரட்டைத்தன்மை கொண்டுள்ளதால், அமெரிக்க - சீன வல்லாதிக்கப் போட்டியில் இந்தியா எந்தப் பக்கம் என்றில்லாத நிலைதான். அமெரிக்கச் சீன கருத்துப் பரிமாற்றங்கள் ஊடே பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியமற்ற தன்மை புலப்படுகின்றது. ஆனால் இந்தியாவின் சில பிரதான ஊடகங்கள் அதனை இந்திய மூலோபாயமாகக் காண்பிப்பதுதான் வேடிக்கை.
நவ. 04 22:32

வடபகுதியில் நீரிழிவு நோய்த் தாக்கம் அதிகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நீரிழிவு நோய் விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நோய் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நவ. 03 22:52

மன்னாரில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் பகுதியான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான பெரும்போக நெற்செய்கை சுமார் 57820 ஏக்கர் விஸ்தீரணத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மேலும் தற்பொழுது பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட விவசாயிகள் பெரும்போக நெற்செய்கைகளுக்காக உழவு பணிகளை ஆரம்பித்துள்ளதாக அன்டனி மரின்குமார் மேலும் தெரிவித்தார்.
நவ. 02 08:57

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் விடுதலை

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் 2019 ஆம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பான அனைத்துக் குற்றச் சாட்டுக்களில் இருந்தும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களின் பிரதான சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதற்கான கட்டளையை கோட்டை நீதவான் திலிண கமகே, இன்று புதன்கிழமை பிறப்பித்தார்.
நவ. 01 09:24

கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைக் குற்றம் சுமத்துகிறார் விமல்

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகமான வடக்கு மாகாணக் கடற்பரப்பில் ஈழத் தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களும் மோதிக்கொள்ளும் சூழலின் பின்னணியில் இந்திய - இலங்கைக் கடற்படை திட்டமிட்டு செயற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலோசனையின் பிரகாரம் வடக்கு கடற்பகுதி முழுவதையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டு பின்னர் முரண்பட்டுத் தனித்துச் செயற்பட்டு வரும் விமல் வீரவன்ச, தமிழக மீனவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.