செய்தி: நிரல்
பெப். 26 20:27

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்ய முடிவு

(கிளிநொச்சி, ஈழம்) உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்க நிதி அமைச்சிற்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றத்தில் மனுச் செய்யவுள்ளதாக ஜே.வி.பியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. எதிர்வரும் தினங்களில் இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்படும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பாக ஜனாதிபதிக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெப். 23 10:57

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்குமா?

(கிளிநொச்சி, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அரச ஊழியர் மட்டத்தில் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டு தசம் ஒன்பது பில்லியன்களை எதிர்வரும் மார்ச் மாதம் பெற இலங்கை அரசாங்கம் கடும் முயற்சி எடுத்து வருவதாக கொழும்பில் உள்ள நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் நான்கு அதிகாரபூர்வ கலந்துரையாடல்களையும், மேலும் இரண்டு ஊழியர் மட்ட உரையாடல்களையும் நடத்தியுள்ளதாகக் கூறியுள்ள நிதியமைச்சின் அதிகாரி ஒருவர், சீனா கடன் மறுசீரமைப்பு விடயத்தில் நம்பிக்கை தரும்படியான பதில் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பெப். 22 08:00

மார்ச் மாதத்தில் அரசாங்கத்துக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்படும் - அமைச்சர் பந்துல அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை அரசாங்கத்துக்கு, மார்ச் மாதத்தில் மட்டும் தாங்கிக்கொள்ள முடியாத கடன் சுமை இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன அமைச்சரவைக்கு அறியத்தந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, மார்ச் மாதத்தில், அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானம் 173 பில்லியன் ரூபா. ஆனால் இது போதுமானதல்ல என்றார்.
பெப். 21 07:59

தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம்- பேராயர் பகிரங்க அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) பொது மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்படைந்து வருவதால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்காமல் தேர்தலை நடத்தி மக்களின் விருப்பங்களை அறிய வேண்டுமென இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு பொரள்ளையில் உள்ள பேராயர் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ பேராயர் மல்கம் ரஞ்சித்தின் அறிவிப்பை பகிரங்கப்படுத்தினார்.
பெப். 17 20:47

உள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுக்குரிய நிதியை வழங்க முடியாதென நிதியமைச்சு அறிவிப்பு

இலங்கைத்தீவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுகளுக்குரிய நிதியை வழங்க முடியாதென நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், நிதியமைச்சின் செயலாளர் நிதியை வழங்க முடியாதெனக் கூறியதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெப். 15 22:44

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் இல்லை- அமைச்சர் பந்துல

(வவுனியா, ஈழம்) உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் இல்லையென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நிதி இல்லை என்பதால் வாக்காளர் அட்டை மற்றும் தேர்தல் செயற்பாடுகளுக்குரிய அச்சுப் பதிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பாகத் தனியார் இலத்திரனியல் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெப். 14 16:16

தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் பிணையில் விடுதலை

(வவுனியா, ஈழம்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு பதின் நான்கு வருடங்களின் பின்னர் திங்கட்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயமடைந்தமை தொடர்பாக இந்த நான்கு கைதிகளுக்கும் எதிராக இலங்கைக் குற்றப் புலனாய்வுத்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது சம்பவம் தொடர்பாகப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இருபத்து மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு காலி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பெப். 09 23:09

பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டாமென ராஜபக்ச தரப்பு அமைச்சர்கள் ஜனாதிபதிடம் வேண்டுகோள்

(வவுனியா, ஈழம்) புதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் வெறுமனே மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் நடத்த வேண்டுமென ராஜபக்ச சார்பு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பில் பௌத்த பிக்குமார் நடத்திய போராட்டம் மற்றும் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டாமென மகாநாயக்கத் தேரர்கள் அனுப்பிய கடிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுடன் உரையாடிய ராஜபக்ச தரப்பு அமைப்புகள், பதின்மூன்று பற்றிய பேச்சைக் கைவிடுமாறும் கேட்டதாக அறிய முடிகின்றது.
பெப். 08 22:45

பதின்மூன்றுக்கு எதிராகக் கொழும்பில் பிக்குமார் போராட்டம்

(வவுனியா, ஈழம்) பதின்மூன்று முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தனது கொள்கை விளக்கவுரையின்போது கூறியபோது. கொழும்பில் பௌத்த குருமார் பதின்மூன்றுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகப் பெருந்திரளான பெளத்த பிக்குமார் கொழும்பில் நடத்திய பேரணியால் கொழும்பு நகரம் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக ஸ்தம்பிதமடைந்தது. கலகமடக்கும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தபோதும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
பெப். 05 23:01

வடக்கில் இருந்து கிழக்குக்குப் பேரணி- இரண்டாம் நாளும் பெருமளவு மக்கள் பங்கேற்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கைத்தீவின் எழுபத்து ஐந்தாவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடராக மேற்கொண்டு வரும் பேரணியில் பொதுமக்கள் பலரும் பங்குபற்றி வருகின்றனர். தமிழ்த்தேசியக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளின்றி கலந்துகொண்டுள்ளனர். நான்காம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்த பேரணி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் முல்லைத்தீவில் நிறைவடைந்துள்ளது. இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவினர்களுக்காகப் பேரணியில் பங்குபற்றிய பொதுமக்கள் கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தியிருந்தனர். பெரும் திரளான மக்கள் முள்ளிவாய்காலில் ஒன்றுகூடியிருந்தனர்.