நிரல்
நவ. 28 15:51

அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன கைது - அரசியல் நெருக்கடியிலும் பௌத்த தேசியத்துக்கான ஒற்றுமை

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று புதன்கிழமை இலங்கை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை அரசியல் நெருக்கடி விவகாரங்களில் இந்தியா, மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் கவனம் செலுத்தி வரும் நிலையில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை அரசியல் யாப்பை மீறிச் செயற்படுகின்றார் எனவும் இலங்கை நீதித்துறை சுயாதீனமாக செயற்படவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் 2006ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒன்றில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
நவ. 28 08:50

மைத்திரி - மஹிந்த அரசாங்கத்துக்கு சர்வதேசம் பாடம் புகட்டும் - இரா.சம்பந்தன்

(மன்னார், ஈழம்) ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காமலும், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஏற்றுக்கொள்ளாமலும், அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுவரும், மைத்திரி - மஹிந்த தரப்பினரின் அரசாங்கத்துக்கு, சர்வதேசம் பாடம் புகட்டுமெனவும், இதற்கான காலம் தற்போது உதயமாகியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை குறித்து, நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நவ. 28 08:27

ஐ.நா ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் கொழும்பில் - சீனத் தூதுவர் மகிந்த தரப்புடன் சந்திப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமரான பின்னர் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை அரசியல் நெருக்கடி குறித்து பிரதான அரசியல் கட்சிகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசி வருகின்றன. ஜனநாயக மீறல் எனவும் இலங்கை அரசியல் யாப்புக்கு அமைவாக பிரதான அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும் என்றும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனா். அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் உரையாடியுமுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்து மைத்திரி விளக்கமளித்துமுள்ளார்.
நவ. 27 16:22

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை

(முல்லைத்தீவு, ஈழம்) கொழும்பில் ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன இரண்டாவது தடவையாகவும் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. கடந்த செப்டெம்பர் மாதம் முன்னிலையாக வேண்டும் என கூறப்பட்டிருந்தபோதும் அவர் மெக்சிக்கோ நாட்டிற்குச் சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமையும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன முன்லையாகவில்லையென இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நவ. 27 13:56

மகிந்த தரப்பு நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்தது - அரசாங்கம் செயலிழந்துள்ளதாக ரணில் தரப்பு சபையில் விளக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) சபாநாயகர் கருஜயசூரிய நிலையியல் கட்டளைச் சட்டங்களுக்கு அமைவாக நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கப்போவதில்லை என நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மையப்படுத்திய மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர்கள் சபாநாயகர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையில் கடந்த ஒரு மாதமாக நிலவிவரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.
நவ. 27 09:48

மாவீரர் நாள் இன்று - தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகளும் அஞ்சலிக்குத் தயார்

(கிளிநொச்சி, ஈழம்) ஈழத்தமிழ் மக்களது விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களது நினைவு நாள் இன்று கார்திகை 27 ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகள் உட்பட புலம்பெயர் நாடுகளிலும் அனுட்டிக்கப்படுகின்றது. தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்ட துயிலுமில்லங்கள், அஞ்சலிக்காக தயாராகியுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு உணர்வுபூர்வமாக காட்சியளிக்கின்றன. அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கென பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்ட நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவித்தார்.
நவ. 26 23:38

தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்கின் சாட்சிக்கு அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு

(கிளிநொச்சி, ஈழம்) போர்க் காலத்தின் போது கொழும்பில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் பிரதான சாட்சியான, இலங்கைக் கடற்படை அதிகாரியான லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே என்பவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தாக்கியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் அவரது சகாக்களான ஆறு கடற்படை அதிகாரிகளும் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வழக்கின் பிரதான சந்தேக நபரான இலங்கைக் கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
நவ. 26 22:50

அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய ஏழு நீதியரசா்கள் நியமிக்கப்பட்டமை எந்த அடிப்படையில்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பான இலங்கை வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான ஏழு நீதியரசர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை பிரதம நீதியரசர் நளின் பெரேரா வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவாகவே தாக்கல் செய்திருந்தன. ஆனால் அரசியல் நெருக்கடி விவகாரமாகக் கருதி உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வாக விசாரணையை நடத்துமாறு கோரி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் இடையீட்டு மனு ஒன்றை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.
நவ. 26 16:20

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்

(மன்னார், ஈழம்) இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாக திகழும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது வேதனத்தை 1000 ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி மனித சங்கிலிப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். தலவாக்கலை, அக்கரப்பத்தனை, லிந்துலை, டயகம, மன்ராசி, ஹோல்புரூக் உள்ளிட்ட தோட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெருந்தோட்ட மக்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் தலவாக்கலையிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதாக அப்பிரதேச வியாபாரிகள் கூர்மை செய்தித்தளத்திற்கு தெரிவித்தனர்.
நவ. 26 13:59

ஐ.தே.க தாக்கல் செய்த மனு தொடர்பில் 30 ஆம் திகதி விசாரணை - கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை எனத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, எதிர்வரும் 30 மற்றும் 3 ஆம் திகதிகளில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.