நிரல்
ஜூன் 04 11:10

அமெரிக்கப் பாதுகாப்பு ஒப்பந்தம் - கிளார்க் கூப்பரின் வருகை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையுடன் அமெரிக்கா செய்யவுள்ள பாதூகாப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக மகாநாயக்க தேரர்களும் சிங்கள அரசியல்வாதிகள் பலரும் குரல் எழுப்பியுள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கிளார்க் கூப்பர் (R. Clarke Cooper) கொழும்புக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தனவைச் சந்தித்த கிளார்க் கூப்பர், உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல் தொடர்பாகவும் அதன் பின்னரான நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்வது குறித்தும் பேசப்பட்டதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கூறுகின்றது.
ஜூன் 03 14:57

கிஸ்புல்லா, அசாத்சாலி பதவி விலகல் - உண்ணாவிரதம் நிறுத்தம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதங்களைக் கையளித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவும் இன்று திங்கட்கிழமை காலையும் மைத்திரியுடன் நடத்தப்பட்ட பேச்சின் பின்னர் தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்தாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதுவரை அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகவில்லை. ஆனாலும் மைத்திரியின் ஒற்றையாட்சி அதிகாரத்தின் கீழ் பதவி வகித்த இரண்டு ஆளுநர்களும் பதவி விலகியுள்ளனர்.
ஜூன் 03 10:39

நான்காவது நாளாக அத்துரலியே ரத்தன தேரரின் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவியில் இருந்து விலக்கமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இன்று திங்கட்கிழமை நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில ஈடுபட்டு வரும் அத்துரலியே ரத்தன தேரரின் உடல் நிலை பலவீனமடைந்துள்ளதாக இன்று அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். கண்டியில் இன்று வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சிங்கள வர்த்தகர்கள் அனைவரும் அத்துரலியே ரத்தன தேரருக்க ஆதரவு வழங்கியுள்ளனர்.
ஜூன் 02 22:25

சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயப் பிரச்சினைக்குத் தீர்வு- நிர்வாகிகள் நியமனம்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் - கொடிகாமம் வரணி வடக்குப் பிரதேசத்தில் உள்ள சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் பல ஆண்டுகளாக இடம்பெற்று வரும் சமூக ஒடுக்குமுறைப் பிரச்சினைகளுக்குத் சுமூகமான முறையில் தீர்வு காண்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அனைத்துச் சமூகங்களும் ஆலயத் திருவிழாக்களில் பங்கெடுத்து தமிழ் மக்கள் என்ற அடையாளத்துடன் செயற்படுவதற்குரிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள், ஆலயத் திருவிழாவை நடத்துவது தொடர்பான விடயங்கள் ஆகியவற்றைக் கையாள்வதற்கு ஏற்ற பரிபாலன சபை ஒன்றுக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உறுப்பினர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஜூன் 01 22:26

ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறை அச்சுறுத்தல் ஆரம்பிக்கப்பட்டு இன்று 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழநாடு பத்திரிகை காரியாலயம் 1981 ஆம் ஆண்டு யூன் மாதம் 1ஆம் திகதி அதிகாலை எரிக்கப்பட்டமை ஊடகத்துறையின் இருண்ட யுகமாகும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை ஈழநாடு பத்திரிகை முதன்மைப்படுத்தி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. இலங்கையில் கொழும்பில் இருந்து பத்திரிகைகள் வெளிவந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை தமிழர்களின் அரசியல் உரிமை விடயத்தில் மிக முக்கிமான பங்கு வகித்திருந்தது.
ஜூன் 01 22:08

பௌத்த பிக்குமார் உண்ணாவிரதம் - மைத்திரி, ரணில் மௌனம்

(யாழ்ப்பாணம், ஈழம்) அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பை மையப்படுத்திய மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் கிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவி விலக்குமாறு கோரி இலங்கையின் தலைநகர் கொழும்பு, கண்டி ஆகிய பிரதேசங்களில் பௌத்த குருமார் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுழற்சி முறையில் பௌத்த பிக்குமார் கலந்துகொள்கின்றனர். கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருக்கின்றார். நூற்றுக்கும் அதிகமான பௌத்த குருமார் தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக சுழற்சி முறையில் பங்குபற்றி வருகின்றனர்.
ஜூன் 01 11:36

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய யாழ் பொது நூலகம் தீக்கிரையாகி 38 ஆண்டுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் மக்களின் கல்வி மற்றும் கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் யாழ்ப்பாண நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆசியாவின் மிகப்பெரிய பொது நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டமை சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. அறுதிப் பெரும்பான்மையுடன் 1977ஆம் ஆண்டு ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் 1981ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
மே 31 15:00

திருகோணமலை சம்பூரில் மீண்டும் அனல்மின் நிலையம்

(திருகோணமலை, ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்திலும் முஸ்லிம் மக்கள் கூடுதலாக வாழும் புத்தளம் - நுரைச்சோலைப் பிரதேசத்திலும் அனல்மின் நிலையம் அமைப்பதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. திருகோணமலை பவுல் பொயின்ட் பகுதியில் முந்நூறு மெகாவாட் உற்பத்தித் திறன் உள்ள, இரண்டு உயர் திறன்மிக்க அனல்மின் நிலையங்களும், நுரைச்சோலையில் 300 மெகாவாட் உள்ள மற்றொரு அனல் மின் நிலையமும் அமைக்கப்படவுள்ளன. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, இதற்கான அனுமதிப்பத்திரத்தை நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
மே 31 03:32

இந்திய நடுவண் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - இந்திய அமைதிப்படை ஆலோசகர் ஜெயசங்கர் அமைச்சராகிறார்

(சென்னை, தமிழ்நாடு) இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பா.ஜ.கவின் புதிய அரசாங்கம் பதவி ஏற்றுள்ளது! தமிழ் தெரிந்த இருவர் அமைச்சராகப் பதவியேற்றுள்ளனர். எந்தத் துறை என்பதும் கூடியவிரைவில் வெளியாகும். அதில் ஒருவரான நிர்மலா சீதாராமன் 2017 - 2019இல் இராணுவ அமைச்சராக பதவிவகித்தவர். இன்னொருவரான ஜெய்சங்கர் 1988-1990 இல் இந்திய அமைதிப்படைக்கான அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்பதும், ஜெய்சங்கர் மற்றும் அவரது தந்தை சுப்ரமணியன் அவர்கள் இருவருமே இந்திய - அமெரிக்க ஒப்பந்தங்கள் பலவற்றில், குறிப்பாக அணுசக்தி விவகாரங்களில், ஆலோசகராகவும் இருந்தவர்கள். இந்திய வெளிவிவகார அதிகாரிகளில் மாந்தரின், ஜப்பான், ருசிய மொழிகளில் புலமை வாய்ந்த வெகுசிலரில் ஜெய்சங்கரும் ஒருவர் என்பதும் கவனிக்கத்தக்கது.
மே 30 21:50

நாடாளுமன்றத் தெரிவுக்குழு குற்றவாளிகளைக் காப்பாற்றும்!

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் உண்மைத் தன்மைகளை மூடிமறைப்பதற்காகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டதாக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்துள்ளதால், குற்றவாளிகளாகச் சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகள் சிலரும் அரச உயர் அதிகாரிகள் சிலரும் தப்பித்துவிடுவர்கள் என்றும் சட்டத்தின் முன் அவர்களை நிறுத்துமாறு கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வழக்குத் தாக்கல் கூடச் செய்ய முடியாதெனவும் சட்டத்தரணிகள் சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைத்திரிபால சிறிசேன அவசர அவசரமாக ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்தன் நோக்கம் கூட குற்றவாளிகளைக் காப்பாற்றவே என்று சட்டத்துறைத் தகவல்களும் கூறுகின்றன.